+91 99437 41013

Articles

சித்த மருத்துவம்

தமிழ்நாட்டில் மொழி, சைவ பேரறிவியல், மருத்துவம் ஆகிய மூன்று நூற்களும் அல்லது முறைகளும் ஒரு சேர உருவாக்கப்பட்டது அல்லது அருளப்பட்டது

சித்தர் - சித்தர் என்போர், எல்லாக் கலைகளையும் (பதிணெண்மொழி, அறுபத்து நான்கு கலையும்) நன்று கற்று, பயின்று, சிந்தித்து, ஞானம் பெற்று, அறிவு தெளிந்து, தொண்ணூற்றாறு தத்துவங்களோடு கூடிய உடல் அமைப்பை புரிந்து கொண்டு நிலம், மொழி, தனித்துவம் பெற்ற வாத, பித்த, கப என உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு மருத்துவ முறையை உருவாக்கியவர்கள். உயிர் ஒன்றேயாயினும், இயங்குத் தன்மையில் ஆக்கல் செயலுள்ளபோது வாதம் எனவும், நிலைத்தல் (காத்தல்) செயலுள்ளபோது பித்தம் எனவும், அழித்தல் செயலுள்ளபோது கபம் எனவும் உயிர் ஓட்ட சக்தியை "நாடி" அமைப்பாகவும், உடலில் பிரகிருதியாகவும்(அமைப்பு), மாறுபட்ட நிலைகளில் நோயாகவும் உணரப்படுகிறது.

சித்தர்கள், சித்த மருத்துவத்தின், மருத்துவ முறையாகிய மணி, மந்திர, அவிழ்தமென்பது "நோயைத் தடுத்தும்", "வந்த நோயைப் போக்கியும்", "உடலை அழியாது காக்கும்" காய கற்பம் - காயம்-உடல் கற்பம்-கல்லைபோல் உடலை நீண்ட காலம் வாழச் செய்தல் என்னும் சிறந்த ஒரு முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதில் "மணி" என்பது தாதுப்பொருட்கள் (மினரல்ஸ்) கொண்டு இரசவாத முறையில் மருந்துகளை உண்டாக்குதல் அதாவது (Chemical Reaction) தாதுக்களை குறிப்பிட்ட முறையில் "இணைத்தல்" "ஒன்றாக்குதல்" என்ற முறையும் தெய்வசக்தியால் குணமாக்கப்படுவதும், "மந்திரம்" என்பது "மனத்தின் தரம்" ஒவ்வொருவரும் அவர்களின் மனத்தின் திறத்தால் ஐம்புலனை அடக்க மூச்சடக்கி மனதையோர் நிலைக்குக் கொணர்ந்து, உடலை காக்கும் பொருட்டு ஓகம் (யோகம்) (மந்திரம்) என்னும் முறையில் புலன்களை சிதற வொட்டாமல் தம் நாட்டத்தை ஒரு நிலையில் வைத்து மந்திரத்திற்கான எழுத்துகளை ஓதல்

சித்தர்கள் இந்நிலையையும் தாண்டி மந்திரத்திற்கான எழுத்துக்களை ஓதாமலே ஆறு நிலைகளையும் தம் வழியாக்கி, தம் சிந்தனை வழியாகவே இவ்வுலக வாழ்க்கையையும், மருத்துவ முறைகளையும் உணர்ந்து, அனுபவித்து, மக்களுக்கு அளித்த "முறையான" முறையாகும். இதுவே தந்திர முறையாகும். தன்னையடக்கல் - தியான முறையாகும்.

நோய் வருவதற்கு உணவு முறையும், வெளிபுற சூழ்நிலைகள், தட்பவெட்பங்கள் மட்டும் காரணமில்லை. "நமக்குள்ளே நடக்கும் செயல்களும், செயல்படுத்தும் விதமும் தான்" மிக முக்கிய காரணிகளாகின்றன. இம்முறையை சரியாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ!

 • நன்னடக்கை (இயமம்)
 • நற்செயல் (நியமம்)
 • இருக்கை (ஆசனங்கள்)
 • சரப்பழக்கம் (பிராணாயாமம்)
 • புலனடக்கல் (பிரத்தியாகாரம்)
 • மூச்சடக்கல் (மனமடக்கல்) (தாரணை)
 • தன்னையடக்கல் (தந்திரம்) (தியானம்)
 • இரண்டறக்கலத்தல் (சமாதி)

இவ்விடத்தில் சமாதி என்பது சமாதியடைதல் என்பது மட்டும் இல்லை. மேற்கண்ட ஏழு(7) செயல்கள் நாம் சரியாக வைத்திருக்கும் நிலையில் வெளிபுற சூழ்நிலையுடன் பஞ்சபூத சக்தியுடன் நம் பஞ்பூத சக்தி சமம் பெறுகிறது. இதனால் உடல் அழிவிலிருந்து காக்கப்படுகிறது.

இதனால் நாடி நரம்புகள் (யூகி சிந்தாமணியில் எழுபத்தீராயிர நரம்புகள், இடகலை சுழுமுனை பிங்கலை என்ற நரம்புகள், எருவாய்க்கும், கருவாய்க்கும் நடுவில் அமைந்திருக்கும் நரம்புக்கூட்டம். இங்கிருந்து எழும் ஒரு நரம்பு "குண்டலினி" இந்நரம்புகள் கத்திரிக்கோல் போல் மாறுவதையும் தம் நூலில் கூறியுள்ளார்) அமைதி பெற்று நோய் வராமல் தடுப்பு சக்தி பெறுகிறது.

இம்முறைகளையாவும் மந்திர, தந்திரமுறைகள்.

அவிழ்தம்:- காயகற்பத்தில் மூன்றாவது முறை. அவிழ்+தம். உடலில் பிணிக்கப்பட்ட வாத, பித்த, கப குற்றங்களையும் ஐந்துவாயுக்கள், ஏழு உடற்தாதுக்களிலும் ஏற்றத்தாழ்வுகள் அவிழ்பதே (கழறுவது) அவிழ்தம் (மருந்துகள்). இம்மருந்துகள் மூன்று வகைகளில் இப்பு+மியிலிருந்தே இயற்கையாக கிடைக்கிறது. ஆவைகள்

 • மூலி (மூலிகைகள்):- வேரையுடைய (மூலம்-வேர் ) புல், பூண்டு , செடி, கொடி, மரங்கள்
 • உயிர்ப்பொருள்கள்:- சங்கு, முத்து, பவழம், கொம்புகள், தேன், கஸ்தூரி, கோரோசனம், பால், பாற்பொருட்கள் போன்ற உயிரினங்களின் எச்சங்கள்
 • தரைபடு பொருள்கள் (தாது பொருட்கள்):- இரும்பு, செம்பு, பொன், வெள்ளி , இரசம், பாடாணங்கள், உப்பு வகைகள், இரச சத்துகள் (Minerals).

முதல் இரண்டு வகைகளில் குடிநீர், சாறு, பொடி, இளகம், எண்ணெய் என்ற மருந்து முறைகளாகவும் அல்லது "உணவு வகைகளாகவும்", தரைபடுபொருள்களை பற்பம், செந்தூரம் என்ற மருந்து முறைகளாகவும் அல்லது "உபயோகப்படுத்தும்" பொருள்களாகவும் நம்பண்பாட்டில் இருந்துவருகிறது. நாம் யாரும் இதை "பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது" இவ்வாறு நாம் இயற்கையோடு இயற்கையாக இருக்கும் பொழுது எங்கிருந்து பின்விளைவுகள் வரும்? என்பதை சிந்தித்து சித்தம் பெற வேண்டும். சித்தம் பெற்றவர்கள் "சித்தர்கள்". அவர்கள் இம்மருத்துவ முறையை கொண்டு நம் உடலின் 96 தத்துவங்கள், (சூக்கும உடற்கூறு) (யூகி சிந்தாமணி, வைத்திய சதக நாடி என்ற சித்த மருத்துவ நூல்களில்) பருவுடலின் உடற்கூற்றில் (Anatomy) எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், இவ்விரண்டையும் வெளி பஞ்சபூத சக்தியோடு இணைக்கும் "காரணவுடல்" பற்றியும் தெளிந்தவர்கள்.

96 தத்துவமாக உருவாக்கப்பட்ட யாக்கையின் (உடலின்) இயற்கை இலக்கணமான வளி உடலினன், பித்த (அழல்) உடலினன், ஐய (கப) உடலினன் என்ற இயற்கை உடல்வன்மையானது, கால வன்மை - "இளவேனில், முதுவேனில், என பொழுதுகளும் (காயம்) நில அமைப்புகளும், உடலின் வயதாலும்" செயற்கை வன்மை - இயற்கையாக அமைந்த முக்குண உடலை சத்துவம், இரோச, தமோ குணத்தை மாற்றிக் கொள்வதாலும் (உணவு, செயல்) அதாவது உணவை சக்தியாக உடலாக மாற்றுவதில் பங்கு வகிக்கும் நான்கு வகையான உடற்றீ (தீ) - சமாக்கினி, விஷமாக்கினி, தீஷணாக்கினி, மந்தாக்கினி ஆகியவற்றின் செயல்பாட்டால் அமைந்த" ஏழு உடற்கட்டுகளின் இயற்கை பண்புகள் மாறுபட்டு அவைகள் குறைந்தோ, மிகுந்தோ (சாரம், செந்நீர், ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர்) உடல் பிணிபடும் (நோய்வாய்பப்படும்)

செயல்களால் உடல் வன்மை எவ்வாறு பிணிபடுகிறது என்பது பதினான்கு வேகங்களை அதன் இயற்கை தொழில் புரியவிடாமல் அடக்குதல் அல்லது அதிகமாக்குதல் என்ற செயலாலும் உடல் பிணிபடும். அவைகள்

 • அபானவாயு
 • தும்மல்
 • சிறுநீர்
 • மலம்
 • கொட்டாவி
 • பசி
 • நீர்வேட்கை அல்லது தாகம்
 • இருமல்
 • இளைப்பு
 • தூக்கம்
 • வாந்தி
 • கண்நீர்
 • சுக்கிலம் அல்லது நாதம்
 • மூச்சு அல்லது உயிர்ப்பு என்பதாம். உயிர்ப்பு (உயிர்) என்பது வெப்பமாகவும், தட்பமாகவும், துடிப்பாகவும் (தீ போன்று) மேல் நோக்கிய சக்தியாகவும், ஓட்டமாகவும் இருப்பதாகும்.

இவ்வாறாக உடல்வன்மையானது, பாதிக்கப்பட்டு முத்தோடம், முக்குற்றங்களின் வேற்றுமைகளாகி உடலுடன் பிணைந்த உயிர் அனுபவிக்கும் துன்ப (உரோகம்) உணர்ச்சி உடற்பிணி

முக்குணங்களின் (சத்துவ, இரசோ, தமோ) வேற்றுமையால் வந்த மன (வருத்தம் அல்லது உரோகம்) உணர்ச்சி மனப்பிணி.

இவ்வாறாக இயற்கையான உடல்வன்மையானது, பருவகால வேறுபாடுகளினாலும், இயற்கையின் பஞ்சபூத தன்மைகளின் ஏற்ற, தாழ்வுகளினாலும், உயிர்களின் உடலிலும், மனத்திலும், முக்குற்ற, முக்குண மாறுபாடுகள், உணவு, செயல் மாறுபாடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவைகளினால் உண்டான பிணிகள், பிணிகள் அல்லாது உடல்வன்மை கெடுதல், பிணிகள் தாங்க கூடிய (நோய் எதிர்ப்பு என்பது முடியாதது! தாங்குதல், போராடுதல் என்பது மட்டுமே நடக்கக்கூடும்! அல்லது வாய்ப்பு) வகையில் உடலுக்கு வன்மை கொடுக்ககூடியது தான் சித்த மருந்துகள். வாயில் விழுங்ககூடியவைகள் மட்டுமே மருந்துகள் இல்லை. உடலின் வெளிப்புறம் அதனை சரியாக வைத்துக்கொள்ள கூடிய தைலதேய்ப்பு, மூலிகை பொடி தேய்ப்பு, பற்று, ஒற்றடம் என 32 வகைகளும், ஆசனம் பிராணயாமம் தியானம், உடல் உள்உறுப்புகளுக்கான பயிற்சிகள், (ஓம் போன்ற மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் உடல் நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுதல்) தினசரி ஒழுக்கங்கள், உறவு ஒழுக்கங்கள், உணவுமுறைகள், ஐம்புலன்கள் மிகுதியாக செல்லவிடாமலும், அடக்காமலும், சமநிலையில் வைத்து ஆளுதல் வேண்டும், அறம், பொருள், இன்பம் இவற்றிலும், உணவு முறையிலும் அதிக, குறைவு இல்லாமல் நடுவுநிலைமையுடன் இருத்தல் வேண்டும்.

அடுத்து வாழும் இடம் எப்படியிருக்க வேண்டும்? உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் வகையில் நிலமானது (பூமி) 5 வகையாக பிரிக்கப்பட்டு நிலத்தின் தன்மை, விளையும் மூலிகைகள், வாழும் மக்களின் வாழ்க்கை முறை, நீரின் தன்மை, அதற்கேற்றவாறு உண்டாகும் நோய்கள் அவைகளுக்குரிய மருந்துகள் என கூறப்பட்டுள்ளது. அந்த 5 வகை நிலங்கள்

 • குறிஞ்சி
 • முல்லை
 • மருதம்
 • நெய்தல்
 • பாலை

பிறகு சூரியனை பூமி வடக்கு வழி செல்லும் போது உத்தராயணம், தெற்கு வழி செல்ல தட்சிணாயனம். இதனை கொண்டு ஆறு பருவகாலங்களாக பிரிக்கப்பட்டு, அக்காலத்திற்கு ஏற்ற உணவு, சிற்றுண்டி வகைகள், விளையாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், உண்டாகும் நோய்களுக்கான மருந்துகள், மூலிகைகள் என சித்தர்கள் கூறியுள்ளனர். அந்த ஆறு பருவகாலங்கள்

 • கார்காலம்
 • கூதிர்காலம்
 • முன்பனிக்காலம்
 • பின்பனிக்காலம்
 • இளவேனிற்காலம்
 • முதுவேனிற்காலம்

இக்காலங்களில் தனித்தனியாக எந்த சுவையுடன் கூடிய உணவுகள் உட்கொள்ள வேண்டும் என மிக தெளிவாக கூறியுள்ளனர். எந்த சத்துகள் நிறைந்தது என மட்டும் அறிவது எல்லா மக்களுக்கும் கண்டிப்பாக பொருந்தாது. சுவையும், குணமும் மிக மிக அவசியம். அவ்வாறு கூறப்பட்ட ஆறுசுவைகள்

இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு

அடுத்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் காலை 4-6 மணிக்குள் எழுந்து இரவு 7-8 மணிக்குள் உறங்கும் கால வரையிலான நாள் ஒழுக்க முறையை கடைபிடித்தனர். ஒருநாளைக்கு இரண்டு முறை உண்பது நலம். மூன்று முறை உண்ணும் பொழுது காலையில் ---- மணிக்குள்ளும், மதியம் ----- மணிக்குள்ளும், இரவில் ------ மணிக்குள்ளும் உண்ண வேண்டும். மனத்துயரம், சினம் இல்லாமலும், பேசாமலும், பொறுமையாக உட்கொள்ள வேண்டும். உணவு அறுசுவைகளுடன், நெய்ப்பு தன்மையுடனும், சிறிது சூடாகவும் இருத்தல் நலம். உணவின் அளவானது, அவர்அவர்களின் தொழிலைக் குறைவின்றி நடத்துவதற்கான உடற்றீயின் அளவாகும். உணவுக்கேற்ற நீரை (வெந்நீர், மோர், காடிநீர்) இடைஇடையே அவர்அவர்களின் நீர்வேட்கைக்கு ஏற்றவாறு அருந்த வேண்டும்.

மண்பூதத்தின் தன்மையாக வாழும் இடமும், உணவும், நீர்பூதமாக திரவ வடிவ உணவுகளும் எந்த இட நீரை எந்த வகையில் அருந்த வேண்டும் என்பதையும் அறிந்த நாம் அடுத்து தீ பூதத்தை எந்த வகையில் பயன்படுத்துகிறோமானால், மாலை வெயிலில் தான் கண்டிப்பாக காய வேண்டும். அப்பொழுதுதான் குற்றபிணிகள் வழுவெற நீங்கும்.

அடுத்து செயற்கையான உண்டாக்கப்படும், வேள்விபுகை நீண்ட ஆயுளை (நோய் எதிர்ப்பு சக்தியை) கொடுக்கும். மருத்துவமுறையில், பிணிகளை பரிகரிக்கும் பொருட்டு, தூபமுறைகளும், மருந்துகள் செய்வதற்கும், மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள், மூலிகைகளே பயன்படுத்தப்படுகின்றன.

காற்று: (வாயுபூதம்) கடலையடுத்த நிலக்காற்று - கபபிணியோர்கள்தவிர. மற்றவர்களுக்கு பலன் தரும்.

குறிஞ்சி நிலக்காற்று, உடலுக்கு வன்மை தரும்.

முல்லை நிலக்காற்று, வெப்பத்தையுண்டாக்கும்.

மருதநிலக்காற்று, எப்பிணியையும் வரவொட்டாது.

பாலைநிலக்காற்று, பற்பல பிணிகட்கு உட்படுத்தும்.

ஆகவே கட்டப்படும் வீடுகளும், தொழிற்சாலைகளும், கோவில்களும் அதாவது மக்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் நல்ல காற்று வீசும் வகையில் மிகுந்த அறிவியல் புர்வமான முறைகளுடன் தான் அக்கால கட்டட அமைப்புகள் இருந்தன. எனவே வாழும் மக்கள் அனைவரும் இவ்வளவு விசயங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஆகாயம்: (ஆகாயபூதம்) சந்திரன் (அமாவாசை, பெளர்ணமி) நட்சத்திரங்கள், கோள்கள், போன்றவைகளின் சக்திகளின் தாக்கம் எப்பொழுதும் உயிரினங்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்த பஞ்சபூத சக்திகள் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மை இயக்கி கொண்டுதான் இருக்கின்றன.

நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் உயிர்களின் வாழ்நாளாகிறது. அடுத்து நோய் (பிணி) வரும் வழிகள்: அணுகாமல் காத்துக் கொள்ளும் முறைகளை கூறியுள்ளனர்.நோயின் உற்பத்தி: (வரும் காரணங்கள்)

 • நோயாளி என்று சொல்லிக் கொள்வதை நீக்குக
 • செயல்களினால் (தொழில், வாழ்க்கை முறை, உணவு) வந்த துன்பங்கள்
 • உணவுகளை அதன் சுவைகளை வெறுத்தலாகிய நன்றாயில்லை என்ற சகியாமையால் தவிர்த்தலும்
 • எப்பொழுதும் சினம் கொள்வதாலும்
 • மிக்க பசியை தவிர்த்தலும்(நேரம் தவறி உண்ணுதல்)
 • குடிக்க வேண்டிய விதிப்படி, காலத்திற்கும், தன் தேவைக்கும் ஏற்ப இல்லாமல் மிகுதியாக நீர்குடித்தலும்
 • மூன்று முறைக்கு (பொழுது-வேளை) இல்லாது, அடிக்கடி உண்ணும் உணவாலும்
 • அளவுக்கும், தன் தொழிலுக்கும், வாழும் இடத்துக்கும் பொருந்தா உணவுகளை உண்ணுவதாலும்
 • எப்பொழுதும் மேற்பார்வையாய் சூரியனையே பார்த்துக் கொண்டிருப்பதாலும்
 • உடற்பயிற்சி இல்லாது (தொழிலும்) சோம்பலாய் இருத்தலினாலும்
 • அடுத்தவர்களிடம் தன் இயல்பாய் இல்லாது, நடிப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையும்
 • பலவற்றின் நோட்டங்கண்டு (கவனித்து) எப்பொழுதும் சத்தமாய் பேசுதலாலும்
 • நோயால் வருந்திக் கொண்டிருக்கிறபவர்களுடன் புணர்தலினாலும்
 • அளவுக்கு மீறிய நோன்புகள் நோற்பதால் உண்டாகும் உடல் மெலிவாலும்
 • சிறு உணவும் வருத்தப்பட்டுக் கொண்டே உண்ணுதலாலும்
 • மிகுந்த ஈரத்துணியை அல்லது ஈரத்துடன் இருப்பதாலும்
 • வெகுநோய்கள், விளைகின்ற விதையாகி அவ்விதைகளிலிருந்து வேறு நோய்கள் உண்டாகி வயலாகி (பயிராகி)
 • அப்பயிரிலிருந்து, வேறு நோயையுடைய பயிரை (விதையை) உண்டாக்குவது போல், வெகு நோய்களை (கிளைநோய்கள் (பக்க விளைவுகள்)), முற்றிய நோய்களாக்கி கொள்ளுதல்
 • உடன் மருத்துவரை நாடாதிருத்தல்
 • மருத்துவரின் அறிவுரையை கேட்காதிருத்தல் என்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

பிணியணுகாமல் இருக்க கடைபிடிக்கும் விதிகள்:-

 • இரவில் பசுவின் பாலையே உண்போம் (மந்தம்தரும் மற்ற பாலெதுவும் உண்ண வேண்டாம்)
 • உணவு உண்ணும் பொழுது நீரை அதிகளவில் சோர்த்திய மோரை குடிக்க வேண்டும்
 • வெந்நீர் (நீரை காய்ச்சி) பருக வேண்டும்
 • நெய்யை எப்பொழுதும் உருக்கி தான் (திரவ வடிவில்) சாப்பிட வேண்டும்
 • உறவை (கலவியல்) மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதத்தில் ஒரு முறை மட்டும் சேர வேண்டும்
 • மூத்த மாதரை புணரக்கூடாது. அப்படியென்றால் பெண்களும் தன் வயதில் குறைந்த ஆணிடம் புணரக்கூடாது என சித்தர் நூல்கள் கூறுகிறது
 • பகற்பொழுதில் புணர்ச்சியும், துயிலும் கூடாது
 • எண்ணெயிட்டுத் தலை முழுகும் போதெல்லாம் வெந்நீரில் குளிக்க வேண்டும்
 • மலசலங்களை அடக்கக்கூடாது. உடன் கழித்தல் வேண்டும்
 • இளம் வெய்யிலில் காயகூடாது. மாலைவெய்யிலே சிறந்தது.
 • மூலநோய்கள் உண்டாக்கும் (மலச்சிக்கலை) கறிகளை உண்ணக்கூடாது
 • மூத்ததயிர் (முழுவதுமாக தயிர் உறைந்திருத்தலும்); உண்ண வேண்டும்
 • முன்னாள் சமைத்த கறி (உணவு) அமுதுக்கு ஒப்பெனினும் உண்ணக்கூடாது
 • பசித்தாலொழிய உண்ணக்கூடாது. நாள் ஒன்றுக்கு இருமுறை உணவு மிக நன்று.
 • கிழங்கு வகைகளில் கருணைகிழங்கு மிக நன்று. வாழைபிஞ்சுகாய் மிகவும் நன்று
 • உண்டபின்பு சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்
 • அதிக தூசிகள், குப்பைகள், பழையபொருட்கள் உள்ள இடங்களில் இருக்காமல் பார்த்துக் கொள்ளுதல் நன்று
 • நீண்ட நகம், முடிகள் உடலில் இல்லாதிருத்தல் நலம். அதை கத்தரிக்கும் பொழுது உடலில் படக்கூடாது
 • உறக்கம், உணவு, மலநீர்க்கழிவு, புணர்ச்சி, அழுக்காடை, மயிரை சீவுதல் ஆகியவைகளை மாலைக்காலத்தில் விலக்க வேண்டும்
 • இடக்கையைக் கீழமைத்தே, இடது பக்கமாக உறங்குதல் நலம்
 • முதியவர்களிடம் அன்பும், மரியாதையும், நமக்கு உதவும் அனைவரையும் மதிக்கும் பின்பும், மற்ற உயிர்களிடம் பரிவும் தேவை (இவைகள் எல்லாம் உடல்நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் செயல்கள்)
 • ஆறு மாத்திற்கு ஒரு முறை - வாந்தி மருந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை - பேதி மருந்து ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை - நசிய மருந்து வாரத்திற்கு ஒரு முறை - சவரம் செய்தல் (முடி நீக்கல்) நான்கு நாளைக்கு ஒரு முறை எண்ணெயிட்டுத் தலைமுழுகுதல் மூன்று நாளைக்கு ஒரு முறை கண்களுக்கு மையிடுதல் (கலிக்க முறையில்) சித்த மருத்துவ முறையில் (அன்றாட வாழ்க்கை முறையில் மிகவும் அவசியமானவைகள்)
 • நடு இரவில் வாசைன பொருள்களையும், பூக்களையும் முகரக்கூடாது என பிணியணுகாவிதிகள் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பிணியாளி, மருத்துவன், மருந்து முறைகள், பாலர்களுக்கான மருத்துமுறைகள், மகளிர் (பிள்ளை பேறு கால மருத்துமுறைகள்) மருத்துவம் என பல முறைகள் கூறப்பட்டுள்ளது.